செய்திகள்

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Published On 2018-09-12 03:20 GMT   |   Update On 2018-09-12 03:20 GMT
என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் என்று, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். #MinisterVelumani
புதுடெல்லி:

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு டெல்லியில் நேற்று விருது வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசை கவிழ்க்க வேண்டும், அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். உள்ளாட்சி துறையை சிறப்பாக நிர்வகித்த காரணத்தால் விருது கிடைத்து இருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சித்துறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பணிகளை செய்துள்ளேன். ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் ரூ.7 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நானும், அமைச்சர் தங்கமணியும் உறுதுணையாக இருந்து வருகிறோம். கட்சியின் “நமது அம்மா’ பத்திரிகை, அரசின் சாதனைகளை விளக்க தொடங்கப்பட உள்ள டி.வி. ஆகியவற்றை முடக்குவதற்காக தான் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

விதிமுறையை மீறி டெண்டர் விட்டதாக கூறுகிறார்கள். நான் அமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சிறிய தவறு கூட செய்யவில்லை.



உலக பணக்காரர்கள் வரிசையில் மு.க.ஸ்டாலின் குடும்பம் 10-வது இடத்தில் உள்ளது. கலைஞர் டி.வி.க்கு பணம் வந்தது எப்படி? என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் என்னை பதவி விலக சொல்கிறார்கள். சரி, நான் அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.

நான் பதவி விலக தயார். நீங்களும் (மு.க.ஸ்டாலின்) எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. தலைவர் பதவியில் இருந்து விலகி, அந்த பதவியை துரைமுருகனுக்கோ, மு.க.அழகிரிக்கோ கொடுக்க தயாரா?

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். நாளையே மு.க.ஸ்டாலின் பதவி விலகினால் நானும் பதவி விலக தயார்.

இப்போதுகூட திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து, மு.க.ஸ்டாலின் பினாமி சொத்துகள் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு புகார்கள் வந்துள்ளன. அவர்கள் என்ன செய்தாலும் எங்கள் கட்சியையும், ஆட்சியையும் முடக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterVelumani
Tags:    

Similar News