தமிழ்நாடு செய்திகள்

போகி பண்டிகை: பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம்- விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

Published On 2026-01-11 11:56 IST   |   Update On 2026-01-11 11:56:00 IST
  • ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
  • புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் போகிப் பண்டிகையின்போது பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது.

இதைப்போல் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல் பஜார், பொழிச்சலூர், பம்மல் அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், போகிப் பண்டிகையையொட்டி பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு, அதிகாலையில் எரிப்பதால், கடுமையான புகைமூட்டங்கள் ஏற்பட்டு, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் பனிமூட்டமும் அதிகாலை நேரத்தில் இருப்பதால், ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

பொதுமக்கள் போகிப் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள், அதிக அளவு புகைகளை எழுப்பக்கூடிய கழிவு பொருட்கள் போன்றவைகளை, தெருக்களில் போட்டு எரிப்பதை தவிர்த்து விடுங்கள்.

அவ்வாறு எரிப்பதால், அடர் மூடுபனியில், கரும் புகை கலந்து, விமான ஓடுபாதை தெரியாத அளவு, சூழ்ந்து கொள்கிறது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடு, விமான பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே குடியிருப்பு பகுதி மக்கள் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

போகிப்பண்டிகையின் போது பழையபொருட்களை எரித்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அதிகபட்சமாக 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் என மொத்தம் 118 விமான சேவைகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டது .

இதன் பின்னர் விழிப்புணர்வுகளால் போகிப்பண் கையின் போது பழைய பொருட்களை எரிப்பது குறைந்து விமான சேவைகள் பாதிக்கப்படுவது, படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு, போகிப் பண்டிகை புகை மூட்டம் பனிமூட்டம் காரணமாக 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது இதைப்போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்று கருதி, இந்திய விமான நிலைய ஆணையம் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை 4 மணியில் இருந்து, காலை 8 மணி வரையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் என சுமார் 30 வருகை, புறப்பாடு விமானங்கள் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News