செய்திகள்

தத்தளிக்கும் கேரளா - கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

Published On 2018-08-10 02:33 GMT   |   Update On 2018-08-10 02:33 GMT
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. #KeralaRain #KeralaFloods #IdukkiDam
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு, கடும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.



முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

 

கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain #KeralaFloods #IdukkiDam

Tags:    

Similar News