செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை - தயார் நிலையில் பேரிடர் நிவாரணப் படை

Published On 2018-07-30 10:37 GMT   |   Update On 2018-07-30 10:37 GMT
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையின் இன்றைய நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #Idukkidam
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி, செருத்தோனி, குலமாவு ஆகிய நீர்தேக்கங்களுக்கான இடுக்கி அணைக்கட்டு உள்ளது. இந்த நீர்தேக்கத்தையொட்டி இடுக்கி புனல் மின்சார உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் கேரளாவின் பல பகுதிகளில் பெய்த பெருமழையால் இடுக்கி நீர்தேக்கத்தில் அதிகமான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கட்டு பகுதிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2403 அடியாக உள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,394.72 அடியாக இருந்தது. நீர்மட்டம் 2395 அடியாகும்போது, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும். 2397 அடியாக உயரும்பட்சத்தில் ஓரிரு மணி நேரத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு திறந்து விடப்படும் நீர் அருகாமையில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும். இந்நிலையில், வெள்ளத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் இடுக்கியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் உள்ள தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், விமானப்படை மற்றும் சிறியரக படகுகளுடன் கப்பற்படையினரும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு இடுக்கி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் 26 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது. #Idukkidam  #Idukkidamfulllevel #Idukkidamalert 
Tags:    

Similar News