செய்திகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக மோடி பிரதமராக வரவே முடியாது - சந்திரபாபு நாயுடு பேச்சு

Published On 2018-05-27 15:54 IST   |   Update On 2018-05-27 15:54:00 IST
2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அடுத்தமுறை மோடி நிச்சயமாக பிரதமராக வரவே முடியாது என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். #pmmodi #Chandrababu #parliamentelection
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு விஜயவாடா நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சரியாக சிந்திக்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வங்கி சேவைகள் மக்களின் நம்பிக்கையை இழந்தது போன்ற மத்திய அரசின் தோல்விகளை குறிப்பிட்டு இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்ததால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் விலக்கி கொண்டோம். ஆந்திர மாநிலத்தையும், இங்குள்ள மக்களையும் வஞ்சித்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு இந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்கிறது.

1996-ம் ஆண்டு மத்தியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்ததில் இருந்து, கடந்த காலத்தில் அரசுகளை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்குவகித்த தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை ஒருமித்த கட்சிகளுடன் இணைந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைக்கும். இதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

வரும் 2019-ம் தேதி நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என பா.ஜ.க.வினர் பகல்கனவு காணுகிறார்கள். அடுத்த முறை நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது. பொய்  வாக்குறுதிகளை வாரி வழங்கி நிறைவேற்ற முடியாத பிரசார பிரதமர் மோடி அடுத்த முறை பதவியில் அமர முடியாது.

இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #Chandrababu #parliamentelection
Tags:    

Similar News