செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2018-05-23 08:12 GMT   |   Update On 2018-05-23 08:12 GMT
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிர்ப்பலி தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NHRCnotice
புதுடெல்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 11 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டுத் தள்ளியது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கலவரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்தும், காவல்துறையினர் துப்பாக்கியை உபயோகித்தது ஏன்? என்பது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டுள்ளது.

தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #SterliteProtest #ThoothukudiFiring #NHRCnotice
Tags:    

Similar News