செய்திகள்
34 பேர் கொண்ட கர்நாடக மந்திரிசபை நாளை பதவியேற்பு - காங். மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகிறார்
நாளை பதவியேற்க உள்ள கர்நாடக மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். #Karnataka #Kumaraswamy #Congress
பெங்களூர்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் யாருக்கு எத்தனை இடம், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இன்று இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தின் முடிவில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். குமாரசாமி, பரமேஸ்வரா தவிர 32 பேர் மந்திரிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் பதவி தவிர்த்து 21 மந்திரிகள் காங்கிரஸ் தரப்பிலும், முதல்வர் பதவி தவிர்த்து 11 மந்திரிகள் மஜத தரப்பில் பதவியேற்க உள்ளனர். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karnataka #Kumaraswamy #Congress