இந்தியா

பீகாரில் இரும்பு திருடியதாகக் கூறி 2 பேரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்

Published On 2022-11-13 22:27 IST   |   Update On 2022-11-13 22:27:00 IST
  • இருவரையும் இரும்பு திருடர்கள் என்று அடையாளம் கண்டதாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் கூறினர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூரில் இரும்பு திருடியதாகக் கூறி இரண்டு நபர்களை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முசாபர்பூர் நகரத்தில் உள்ள ஒரு பாலத்தின் அருகே இரும்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கம்பிகள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு குவிண்டால் இரும்பு திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு நபர்கள் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் இருவரையும் இரும்பு திருடர்கள் என்று அடையாளம் கண்டதாக உள்ளூரைச் சேர்ந்த சிலர் கூறினர். உடனே அப்பகுதியினர் ஒன்றுதிரண்டு, அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் இரண்டு நபர்களும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். அவர்கள் இருவரும் கம்பி திருடியதாக குற்றம்சாட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இரும்பு திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முசாபர்பூரில் வசிப்பவர்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Tags:    

Similar News