செய்திகள்

திமுக - காங். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி 10ந்தேதி திருச்சியில் பிரசாரம்

Published On 2019-03-29 09:06 GMT   |   Update On 2019-03-29 09:06 GMT
திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருச்சியில் ஏப்ரல் 10ந்தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். #LokSabhaElections2019 #RahulGandhi
திருச்சி:

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த 18-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இன்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.

இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கோவையில் வருகிற 8-ந்தேதி நடைபெறும் மாபெரும் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஏற்கனவே அவர் மதுரை, திருப்பூர், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார்.

4-வது முறையாக அவர் தமிழகம் வருவதால் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தமிழகத்திற்கு வரவழைத்து பிரசாரம் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி 8-ந்தேதி தமிழகம் வருவதால் அவர் வந்து சென்ற பிறகு ராகுலை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.

அநேகமாக வருகிற 10-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ந் தேதி அவர் வேறு ஒரு மாநிலத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் 9-ந் தேதியே ராகுலை தமிழகத்துக்கு அழைத்து வரவும் ஆலோசனை நடந்து வருகிறது.

எனவே ராகுலின் சுற்றுப்பயண திட்டத்தை பொறுத்து அவர் 9 அல்லது 10-ந்தேதிகளில் தமிழகம் வருவார் என்பது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தி.மு.க. கூட்டணியில் புதுவை உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

எனவே புதுவை மற்றும் தமிழகத்துக்கு வசதியாக ஏதாவது ஒரு நகரத்தில் ராகுல் பிரசாரத்துக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி திருச்சியை தேர்வு செய்துள்ளனர். திருச்சியில் அவர் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவார்.



விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய தொகுதிகளும் அருகில் இருப்பதால் திருச்சியை வசதியான இடமாக கருதி ராகுல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

ராகுல்காந்தி திருச்சியில் பிரசாரம் செய்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கூறி வருகிறார்கள்.

மேலும் பிரச்சார கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியையும் தொடங்கியுள்ளனர். திருச்சி பொன்மலை ஜி.கார்னர், தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #RahulGandhi



Tags:    

Similar News