செய்திகள்

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்யுங்கள்- டாக்டர் ராமதாஸ் பேச்சு

Published On 2019-03-27 11:27 GMT   |   Update On 2019-03-27 11:27 GMT
பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #thirumavalavan #ramadoss #parliamentelection

செந்துறை:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

சிதம்பரம் தொகுதியில் நான் தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள். எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மதுரையில் இருந்தவரை நான்தான் அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தினேன். அதற்காக இன்று என்னை பலரும் திட்டுகிறார்கள்.

2013-ல் தருமபுரி கலவரத்திற்கு பின்னர் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். கட்ட பஞ்சாயத்து, வன்முறை கும்பல் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று சொன்னேன்.

தலித் மக்களுக்காக நான் செய்த சேவைகளை பாராட்டி அவர்தான் எனக்கு தமிழ் குடிதாங்கி என்று பட்டம் சூட்டினார். ஆனால் தற்போது அரசியலுக்காக கேவலமாக பேசுகிறார். நான் அவரிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டதற்கு உங்களை பேசினால் தான் நான் அரசியலில் வளர முடியும் என்கிறார்.

விவேகானந்தர் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார். ஆனால் இவரிடம் செல்லும் இளைஞர்களை தவறாக வழி நடத்தி சமூகத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன். இதனை எண்ணி வெட்கபடுகிறோம், வேதனை படுகிறோம். ஆகையால் இந்த தேர்தலில் நீங்கள் அவருக்கு கொடுக்கும் பரிசு அவர் இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.


இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை 30 வருடங்களுக்கு முன்பாகவே திறந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. அதே போன்று அவரது காடு வெட்டி கிராமத்தில் இரட்டை குவளை முறையையும் ஒழித்தார். மேலும் பெரியாரே செய்ய துணியாத அழகாபுரம் கோவில் பிரச்சனையில் இரு சமூகத்தினரையும் மாலை அணிய வைத்து உள்ளே அழைத்து சென்றார்.

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நானும், குருவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தை நானும் காடுவெட்டி குருவும் போராடி பெற்று தந்தோம். ஆட்சிக்கு வராதபோதே பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறோம். இது போன்று எவ்வளவோ சொல்லி பார்த்தோம், பேசி பார்த்தோம் நடக்கவில்லை. தற்போது நல்ல சூழ்நிலை வந்து உள்ளது.

மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரப்போகிறார். அப்போது சிதம்பரம் தொகுதியில் முக்கிய பிரச்சினைகளான ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

முந்திரி விவசாயிகள் பயனடையும் வகையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரம்-அரியலூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்தை செயல்படுத்தவும் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு வேலை மற்றும் அந்த நிறுவனத்தில் அந்த விவசாயிகளை பங்குதாரர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று போராடி பெற்று தருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.  #thirumavalavan #ramadoss #parliamentelection

Tags:    

Similar News