செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டார் - பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2019-03-23 21:16 GMT   |   Update On 2019-03-23 21:16 GMT
கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #MKStalin #EdappadiPalanisamy
தர்மபுரி:

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, அரூர் (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இங்கு கூடியுள்ள கூட்டத்தில் கால்வாசி கூட்டம் கூட அவர்களுக்கு கூடவில்லை. திறந்தவெளி வேனில் காலியாக உள்ள சாலைகளில் முதல்-அமைச்சர் பிரசாரம் செய்கிறார். சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தன்னை நம்பி அ.தி.மு.க.வை விட்டு சென்று உள்ளதாக பேசி உள்ளார்.

ஆனால் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்த எடப்பாடி பழனிசாமி மோடியையும், அமித்‌ஷாவையும் தெய்வமாக வணங்கி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை அமித்‌ஷாவிடம் அடகு வைத்துவிட்டார். மார்வாடி கடையில் நகையை அடகு வைத்தால் மீட்டுவிடலாம். ஆனால் அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது. தன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை அமித்‌ஷாவிடம் அடகு வைத்து உள்ளார்.



அ.தி.மு.க.வின் கதை என்று பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவை திட்டி தீர்த்து புத்தகம் எழுதியவரிடம் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து உள்ளார். இவர் எப்படி ஜெயலலிதா வழியில் செயல்படுவார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று கேள்வி கேட்டவர் ஜெயலலிதா. தற்போது அதை மறந்து விட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள கட்சியை அடமானம் வைத்துவிட்டு பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து உள்ளனர்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மெகாகூட்டணி என்ற பெயரில் மோசமானவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தால் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தற்போதே அந்த நிலை இருக்கும்போது அவ்வாறு கூறுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க. அரசு முகம் சுளிக்காத அளவிற்கு ஆட்சி நடத்துவதாக கூறினார். அவருடைய இந்த பேச்சை கேட்டு தமிழக மக்கள்தான் முகம் சுளிக்கிறார்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று கூறி 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்கு போட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தவில்லை.

இந்த கூட்டணி மூலம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது கம்பீரம் மற்றும் கவர்ச்சியை இழந்து விட்டார். அவர் மனப்பூர்வமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இன்னும் வேட்புமனுவை வாபஸ் பெற காலஅவகாசம் இருக்கிறது. எனவே அன்புமணிராமதாஸ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #MKStalin #EdappadiPalanisamy
Tags:    

Similar News