கிரிக்கெட் (Cricket)

யான்சன் அதிரடி: நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா #T20 World Cup Semi Final

Published On 2026-03-04 20:49 IST   |   Update On 2026-03-04 20:49:00 IST
  • ஸ்டப்ஸ்- யான்சன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.
  • யான்சன் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 7 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெக்கோன்சி வீசினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக் 3-வது பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ரிக்கெல்டன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 1.5 ஓவரில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து வந்த பிரேவிஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். தென்ஆப்பிரிக்கா பவர் பிளேயான முதல் 6 ஓவரில 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்தது.

அதன்பின் தென்ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மார்க்கிராம் (18), டேவிட் மில்லர் (6) ரச்சின் ரவீந்திரா பந்தில் ஆட்டமிழந்தனர். பிரேவிஸ் (34) நீஷம் பந்தில் ஆட்டமிழந்தார்.

தென்ஆப்பிரிக்கா அணி 77 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ் உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. யான்சன் அதிரடியாக விளையாடி ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினார்.

பின்னர் ஸ்டப்ஸ் அதிரடியை தொடங்கினார். 18-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கும், 3-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். யான்சன் 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார். இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் கிடைத்தன. தென்ஆப்பிரிக்கா 18 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்தது.

19-வது ஓவரை பெர்குசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டப்ஸ் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 24 பந்தில் 29 ரன்கள் சேர்த்தார். 5-வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ்- யான்சன் ஜோடி 73 ரன்கள் குவித்தது. 19-வது ஓவரில் யான்சன் இரண்டு சிக்சர்கள் அடுத்தடுத்து பறக்கவிட்டு 27 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.

கடைசி ஓவரை ஹென்றி வீசினார். 3-வது பந்தில் போஸ் க்ளீன் போல்டானார். அடுத்த பந்தில் ரபடா ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே அடிக்க தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. யான்சன் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்றி, மெக்கோன்சி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News