சந்திர கிரகணம்... மூடநம்பிக்கையால் இந்திய கிரிக்கெட் அணி எடுத்த அதிரடி முடிவு?
- வான்கடே மைதானத்தில் மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
- இந்திய அணியின் பயிற்சி சுமார் ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, இரவு 7:00 மணிக்கு மேல் தொடங்கியது.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.
இந்தப் போட்டிக்கு முன்னதாக நேற்று நடைபெறவிருந்த இந்திய அணியின் பயிற்சி அமர்வு சந்திர கிரகணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
வான்கடே மைதானத்தில் மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சந்திர கிரகணம் நிலவியதால் பயிற்சி சுமார் ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, இரவு 7:00 மணிக்கு மேல் தொடங்கியது.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கிரகண நேரத்தில் சுப காரியங்களோ அல்லது புதிய முயற்சிகளோ மேற்கொள்வது அசுபமானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்திய அணி நிர்வாகம் பயிற்சியை ஒத்திவைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்திற்கு முன் எந்தவிதமான "துரதிர்ஷ்டத்தையும்" தவிர்க்க விரும்பி இந்த மாற்றத்தைச் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு ரசிகர்கள் பலர் மூடநம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் அணி மூழ்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.