இந்தியா 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையுமா? இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை
- இந்திய அணி 6-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதியில் விளையாடுகிறது.
- இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரை இறுதியில் ஆடுகிறது.
மும்பை:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
2-வது அரை இறுதி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா-ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.
இந்திய அணி 6-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதியில் விளையாடுகிறது. இதில் 3-ல் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது.
2007-ல் ஆஸ்திரேலியாவை 15 ரன்னிலும், 2014-ல் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2024-ல் இங்கிலாந்தை 65 ரன்னிலும் வீழ்த்தியது. 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் (7 விக்கெட்), 2022-ல் இங்கிலாந்து (10 விக்கெட்) அணிகளிடம் தோற்றது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடும்.
இந்தப்போட்டி தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 72 ரன் னில் வீழ்ந்தது. இந்த மோச மான தோல்விக்கு பிறகு நெருக்கடியில் அபாரமான ஆட் டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை பெற்றது. இதே உத்வேகத்துடன் ஆடி இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளிலும் (அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் நல்ல நிலைக்கு திரும்பியது அணிக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலையை ஏற்படுத்துகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் (231 ரன்), இஷான்கிஷன் (224), திலக்வர்மா (178 ரன்), ஷிவம் துபே (166) ஆகியோர் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா (9 விக்கெட்), வருண் சக்கரவர்த்தி (12 விக்கெட்) ஆகியோர் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் (172 ரன், 6 விக் கெட்) சிறப்பாக செயல் படுகிறார்.
மிகவும் முக்கியமான இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் ஆடிய வீரர்களே இடம் பெறுவார்கள். சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். அதே நேரத்தில் இங்கிலாந்து எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும். இதனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு வரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரிபுரூக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 1 சதம், 1 அரை சதத்துடன் 228 ரன்கள் எடுத்துள்ளார். வில்ஜேக்ஸ், பெதல், பான்டன், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்துவீச்சில் ஆதில் ரஷீத் (11 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், டாசன் (தலா 10 விக்கெட்) ஓவர்டன் (9), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி லீக் சுற்றில் தடுமாறி பின்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேபாளம், ஸ்காட்லாந்து, இத்தாலி ஆகிய அணிகளை வென்றது. வெஸ்ட் இண் டீசிடம் 30 ரன்னில் தோற் றது. சூப்பர் 8 சுற்றில் 3 ஆட் டத்திலும் (இலங்கை, பாகிஸ் தான், நியூசிலாந்து) வெற்றி பெற்றது. இதனால் இந்தியா வுக்கு எதிராக சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக் கையில் இருக்கிறது.
இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரை இறுதியில் ஆடுகிறது. இதற்கு முன்பு விளையாடிய 5 அரைஇறுதியில் 3-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.