செய்திகள்

மும்பை முதல் கோவை வரை யார் ஆட்சியில் குண்டு வெடித்தது- ராகுல் காந்திக்கு இல.கணேசன் கேள்வி

Published On 2019-03-10 10:03 GMT   |   Update On 2019-03-10 10:03 GMT
மும்பை முதல் கோவை வரை யார் ஆட்சியில் குண்டு வெடித்தது என்று ராகுல்காந்திக்கு இல.கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார். #ilaganesan #rahulgandhi #pmmodi

மதுரை:

பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசார் யார் ஆட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஏதோ வரலாற்று ரகசியத்தை கண்டுபிடித்த மாதிரி இப்போது கேள்வி கேட்டுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்திய விமானத்தை ஆப்கானிஸ்தானில் காந்தகார் நகருக்கு கடத்தி சென்று விட்டனர்.

இந்திய விமானத்தில் பயணித்த பயணிகளை விடுவிப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விதித்த ஒரே நிபந்தனை இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான்.

இந்திய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களோ எங்களது பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் அதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்கக்கூடாது என்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தூண்டுதலின்பேரில் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை பிரதமர் வீட்டு முன்பு திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதனால்தான் பிரதமர் வாஜ்பாய் வேறு வழியின்றி மசூத் அசாரை விடுதலை செய்ய நேரிட்டது. இந்திய சிறையில் இருந்து மசூத் அசார் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம்.

நான் ராகுல்காந்தியை பார்த்து கேட்கிறேன். இந்தியாவில் மும்பை முதல் கோவை வரையிலான பயங்கர குண்டு வெடிப்புகள் யார் ஆட்சி காலத்தில் நடந்தது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மொழிப் பிரச்சினையை தூண்டும் வகையில் தமிழகத்தில் ஓடும் ரெயில்களுக்கு தேஜஸ், அந்தியோதயா என இந்தியில் பெயர் வைக்கலாமா? என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அந்த கட்சியின் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் தமிழ் வார்த்தையா? என்று கேட்க விரும்புகிறேன். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 11, 12-ந்தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அது கோடை விடுமுறை காலம். இதனால் அவர் சொல்லி இருக்கலாம்.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைக்க ஆளும் கட்சி தலைவர்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆனாலும் பா.ஜனதா நெருக்கடி காரணமாகத் தான் தே.மு.தி.க.வுடன் பேச்சுவர்த்தை நடக்கிறது என்று கூறுவது சரியல்ல.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதை தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். தமிழக அரசியலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பலத்தை அதிகப்படுத்துவதும், எதிர் கட்சிகளின் பலத்தை அதிகரிக்காததும் தான் ராஜதந்திரம். அத்தகைய பணிகளில்தான் அ.தி.மு.க. கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் பாராளு மன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவு இல்லை. ராகுலுக்கு ஆதரவு என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இல.கணேசன், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படாததால் மு‌ஷரப் அவ்வாறு கூறி இருக்கலாம் என்றார். #ilaganesan #rahulgandhi #pmmodi 

Tags:    

Similar News