- தரமற்ற உணவு தயாரிப்பு பொருட்களை அனுப்பி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மாறன் மற்றும் அவரது மகன் அபிஷேக் இருவரும் சேர்ந்து அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை காமாட்சி செட்டியார் தெற்கு தெருவை சேர்ந்தவர் புரட்சி ராஜன். இவர் உணவு பொருள் ஏஜென்சி நடத்த உதவுவதாக கூறி வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.
அதன்படி திருச்சியை சேர்ந்த மாறன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால் உணவு பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி புரட்சி ராஜன், மாறன் தெரிவித்த வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்.
அதன் பிறகு உணவு பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை மாறன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த பொருட்கள் தரமற்றவையாக இருந்துள்ளன. இதனால் புரட்சி ராஜன் மீண்டும் மாறனை தொடர்பு கொண்டு அதுபற்றி தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களை திருப்பி அனுப்பி விடுவதாகவும், தனக்கு பணத்தை திருப்பி அளிக்கும்படியும் கேட்டுள்ளார். மாறனும் அதற்கு சம்மதித்துள்ளார். அதன்படி புரட்சி ராஜன் பொருட்களை திருப்பி அனுப்பினார். ஆனால் மாறன் பணத்தை திருப்பி தரவில்லை.
அதுபற்றி கேட்ட போது மாறன் மற்றும் அவரது மகன் அபிஷேக் இருவரும் சேர்ந்து அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புரட்சி ராஜன் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.