அரசமைப்பு சட்ட நெறிகளை ஆளுநர் துச்சமாக கருதுகிறார் - வைகோ கண்டனம்
- ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது.
- ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார்.
பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாடவில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார். ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை; ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
மேலும், ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது. மாநில அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துக்களை சேர்ப்பதும் ஆளுநரின் வரம்பை மீறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்காக, நாடு முழுவதும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. செயலாற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.