உள்ளூர் செய்திகள்

கொள்ளை-வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

Published On 2023-02-01 06:43 GMT   |   Update On 2023-02-01 06:43 GMT
  • அருப்புக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை-வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
  • போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வழக்கத்தை விட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்றவற்றில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில் அருப்புக்கோட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, பழக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). மளிகை கடை நடத்தி வரும் இவரது ரூ. 1 அரை லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து அருப்புக்கோட்டை டவுன் மற்றும் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சரண்யா என்பவரது பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுபோன்று அருப்புக்கோட்டை பகுதிகளில் நாள்தோறும் கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்தில் இறங்கி சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News