திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
- திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
- குழித்துறை ஆற்றில் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கு வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இரணியல், குருந்தன் கோடு, கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
திற்பரப்பில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
மேற்கு மாவட்ட பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக குழித்துறை ஆற்றிலும் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தற்பொழுது மழை குறைந்ததையடுத்து சப்பத்து பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையினால் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30.18 அடியாக இருந்தது. அணைக்கு 233 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 41.4, சிற்றாறு 1-29.8, சிற்றாறு 2-18.6, நாகர்கோவில் 4.2, கன்னிமார் 20.6, பூதப்பாண்டி 12.4, முக்கடல் 20, பாலமோர் 6.2, தக்கலை 20, குளச்சல் 8, இரணியல் 6.2, அடையாமடை 27, குருந்தன்கோடு 4.4, கோழிப்போர்விளை 4.8, மாம்பழத்துறையாறு 20.2, ஆணைக்கிடங்கு 18.6, களியல் 15.4, குழித்துறை 5.2, புத்தன் அணை 41, சுருளோடு 62.6, திற்பரப்பு 68.4, முள்ளங்கினாவிளை 5.4.