பொள்ளாச்சி சந்தையில் தக்காளி கிலோ ரூ.40 ஆக சரிவு
- உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
- தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அதன் விலை ஒரு கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மே மாதம் வரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது.
மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக அந்நேரத்தில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15-க்கு என குறைந்த விலையில் விற்பனையானது.
பின் கோடை மழைப்பொழிவு போதியளவு இல்லாததால், பல கிராமங்களில் தக்காளி சாகுபடி குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட மிகவும் குறைவாக இருந்தது.
இதனால் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில், சில வாரத்துக்கு பிறகு, மார்க்கெட்டில் தற்போது தக்காளி வரத்து சற்று அதிகரித்தது. இதனால், அதன் விலை குறைய தொடங்கியது.
உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.500 முதல் ரூ.600-க்கு ஏலம் போனது. சராசரியாக ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. சில வாரத்துக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.