உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை நகராட்சியில் சாலைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம்

Published On 2022-07-26 10:50 GMT   |   Update On 2022-07-26 10:50 GMT
  • தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது.
  • வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம்.

உடுமலை :

உடுமலை நகராட்சி 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரித்து செல்லப்படுகிறது. அத்துடன் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு மூலமாக கூட்டி சுத்தம் செய்து வருகின்றனர்.

சாலைகள் மிகவும் தூய்மையாக இருக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் புதியதாக வாங்கியுள்ளது. இதன் விலை ரூ.24 லட்சம் ஆகும். இந்த வாகனம் சாலையில் செல்லும் போது அதில் உள்ள எந்திரத்தை இயக்கினால் எந்திரத்தின் முன்பகுதியில் உள்ள சீமாறு போன்ற எந்திரம், சாலைப்பகுதியில் உள்ள குப்பை தூசிகளை சேகரித்து கொடுக்கும். இதை வாகனத்தில் உள்ள எந்திரம் உள் இழுத்து கொள்ளும். சாலைகளின் நடுவில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மையத்தடுப்புகளை ஒட்டி கீழ்பகுதியில் மண் சேர்ந்திருக்கும். அந்த மண், தூசியையும் இந்த எந்திரம் இழுத்து வந்து விடும்.

இந்த எந்திரத்தில் உள்ள டேங்கில் மண், தூசி போன்றவை சேர்ந்ததும், அதை வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு, இந்த வாகனத்தை தொடர்ந்து இயக்கலாம். இந்த நவீன எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன், நகராட்சி பொறியாளர் மோகன், உதவிப்பொறியாளர் மாலா ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த வாகனத்தை இயக்குவது எப்படி என்பது குறித்து, வாகனத்தை விற்பனை செய்துள்ள நிறுவனத்தினர், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். அதன் பிறகு இந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News