உள்ளூர் செய்திகள் (District)

சிறுத்தை புலி நடமாட்டம் இல்லாததால் வனத்துறையினர் முகாமை காலி செய்ய முடிவு

Published On 2023-02-23 09:54 GMT   |   Update On 2023-02-23 09:54 GMT
  • கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
  • கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, கன்று குட்டி, கோழிகள், மயில்கள், நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை புலி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இந்த சிறுத்தை புலியை பிடிக்க வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறை யினர் ட்ரோன், கண்காணிப்பு காமிரா மற்றும் கூண்டு அமைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

அதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூரில் கடந்த 16-ந் தேதி சிறுத்தை புலி 5 ஆடுகளை கடித்து கொன்றது. தகவல் அறிந்த இருக்கூர் சமுதாய கூடத்தில் முகாமில் இருந்த சேலம், நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், முதுமலை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தங்களது கூடாரங்களை காலி செய்து வருகின்றனர். தற்போது 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

பரமத்திவேலூர், கரூர் பகுதிகளில் சிறுத்தை புலியின் நடமாட்டம் தென்படவில்லை. சிறுத்தை புலி ஒரே இரவில் 50 கிலோமீட்டர் வரை கடந்து செல்லும் திறன் உடையது. மேலும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை, 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சிறுத்தை புலி கொடைக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

Tags:    

Similar News