உள்ளூர் செய்திகள்

முக்கூடல் பாலத்தின் தற்போதைய நிலை.


தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-06-28 06:57 GMT   |   Update On 2022-06-28 06:57 GMT
  • தென்காசி - இலஞ்சி சாலையில் புதியப்பாலம் கட்டப்பட்ட சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து உள்ளது.
  • தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை:

தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் அரிகரா நதியும், சிற்றாறும் இணையும் இடமான ஆற்றின் குறுக்கே ரூ. 3 கோடி செலவில் புதியபாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.பாலப் பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் செங்கோட்டையில் இருந்து இலஞ்சி வழியாக தென்காசிக்கு 8 கி.மீ. தூரத்தில் செல்ல வேண்டியதை குற்றாலம் வழியாகவோ அல்லது இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாகவோ கூடுதலாக 5 கி.மீ., சுற்றி சென்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.

பாலப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது.சுமார் 13 மாதங்களுக்கு பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தென்காசி - இலஞ்சி சாலையில் புதியப்பாலம் கட்டப்பட்ட சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து உள்ளது. இரவு நேரங்களில் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் வெளிச்சம் இல்லாமல் பழுதடைந்த சாலையில் ஒருவித அச்சத்துடனே வாகனம் ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணிகளை முடித்து விரைவில் தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News