உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

வேலை வாங்கித்தருவதாக கூறி பெண் உள்பட 5 பேரிடம் ரூ.29 லட்சம் மோசடி- 3 பேர் மீது போலீசார் வழக்கு

Published On 2023-05-30 06:29 GMT   |   Update On 2023-05-30 06:29 GMT
  • தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார்.
  • பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கிள்ளியூர்:

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள நாட்டுவள்ளி பகுதியை சேர்ந்தவர் சுஜின், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சித்ரா (வயது 39). இவரது தாய் மாமா பரமேஸ்வரன் (60). திருப்பூரையடுத்த மண்ணரை பகுதியை சேர்ந்த இவர் நீலகிரி மாவட்டத்தில் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார்.

சித்ரா, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். இதனை அறிந்த அவரது மாமா பரமேசுவரன், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் பணம் வாங்கியுள்ளார். மேலும் பல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், வேறு நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கலாம் என பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

தாய்மாமாவின் பேச்சை நம்பிய சித்ரா, கணவரின் உறவினர்கள் மேலும் 4 பேரிடம் கூறியுள்ளார். அவர்களிடமும் வேலைக்கு பணம் பெற்று பரமேஸ்வரனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வகையில் மொத்தம் ரூ. 29 லட்சம், பரமேஸ்வரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வருடங்களாகியும் அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதையடுத்து சித்ரா, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பரமேசுவரன் ஆத்திரம் அடைந்து சித்ராவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சித்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி பணம் வாங்கியது உறுதியானது. அதன் அடிப்படையில் பரமேஸ்வரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் என்ற ராஜேந்திரன், அவரது மனைவி சுகாஷிணி ஆகிய 3 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய நபரான பரமேஸ்வரன் நாளை (31-ந்தேதி) பணி ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில் தற்போது வழக்கு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News