மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதல்- 3 பேர் பலி
- விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக உடைந்து போனது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27).
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினா பேரியை சேர்ந்தவர் மாலை ராஜா(25). இவரது தம்பி சண்முகவேல் (17).
இவர்கள் 3 பேரும் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு நாங்குநேரி பகுதியில் உணவு அருந்தி விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் நோக்கி சென்றனர்.
நாங்குநேரி அருகே உள்ள தாளை குளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார், இரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மகேஷ் மற்றும் மாலை ராஜா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சண்முகவேல் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக உடைந்து போனது.
விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.