தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தூய்மையான கட்சி அல்ல... அது ஒரு கலப்பட கட்சி - கே.பி.முனுசாமி

Published On 2025-12-22 07:30 IST   |   Update On 2025-12-22 07:30:00 IST
  • விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார்.
  • கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி, கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

விஜய், தி.மு.க. தீய கட்சி, த.வெ.க. தூய்மையான கட்சி என்று பேசுகிறார். த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை, எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்று சொல்ல முடியாது.

குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதுதன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள்.

விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார். பிறகு விடுதலை சிறுத்தை கட்சிக்கு சென்றார். அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு அங்கிருந்து வந்தார். அவர் அ.தி.மு.க.விற்கு வர முயற்சி செய்தார். ஆனால் அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது. உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதுபோல்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அது தூய்மை கட்சி இல்லை. கலப்பட கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார்.

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார், அதேபோல் பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்த நிர்மல் குமார் அங்கு சென்றுள்ளார். இவ்வாறு எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய்யுடன் வந்துள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News