உள்ளூர் செய்திகள்

சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2024-03-20 07:16 GMT   |   Update On 2024-03-20 07:16 GMT
  • தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
  • விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானி:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. அதிவேகம் காரணமாக சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களை தாண்டி, கோவை நோக்கி செல்லும் சாலையின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரும், இளம்பெண்ணும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கேரளா மாநிலம் கோத்தப்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சு மனியப்பன் (26) மற்றும் ஹனிசேவியர் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

தூக்க கலக்கத்தில் எதிர்திசையில் உள்ள சாலையின் நடுவே சென்றதால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் முழுவிபரங்கள் குறித்தும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News