உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் அரசியல் கட்சிகளின் ஓட்டு வேட்டை

Published On 2024-04-15 10:20 GMT   |   Update On 2024-04-15 10:20 GMT
  • அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • 8 சட்டமன்றத் தொகுதியில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் மக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு:

தமிழகத்தில் ஒரு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.

ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 31 பேர் களத்தில் உள்ளனர். 31 பேர் களத்தில் இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முக்கிய அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் என பலர் போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக 104 டிகிரி வரை பதிவாகி வருகிறது. கொளுத்தும் வெயில் காரணமாக தேர்தல் களம் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் பிரசாரம் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தற்போது ஈரோடு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

முக்கிய கட்சி வேட்பாளர்கள் காலை 6 மணிக்கு தங்களது பிரசாரத்தை தொடங்கி விடுகின்றனர். ஒவ்வொரு நாளாக குறிப்பிட்ட பகுதியை சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காலை 12 மணி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவர்கள் பின்னர் வெயிலின் தாக்கம் காரணமாக சற்று நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு வரை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் 17-ந் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளதால் தற்போது ஈரோட்டில் உச்சகட்ட அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதியில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் மக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News