உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை- விசாரணைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலன்

Published On 2023-06-10 15:43 IST   |   Update On 2023-06-10 15:43:00 IST
  • கள்ளத்தொடர்பு காரணமாக பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கடந்த 7-ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.

இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக அந்த பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான பெண், தர்மபுரி அதியமான்கோட்டையை சேர்ந்த பூங்கொடி (40), ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புக்கசாகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில்தான் பூங்கோதை கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர், போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News