கடலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் பீதி
- நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது.
- வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் பகுதி மலைப்பகுதியாக இருந்து வருகிறது. இங்கு பெரும்பாலும் வாழை , முந்திரி மரங்கள், வேர்க்கடலை உள்ளிட்ட ஊடுபயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது.
இங்கு அதே பகுதியை சேர்ந்த நயினார் வேர்க்கடலை பயிரிட்டு இருந்தார். தற்போது வேர்க்கடலை முளைத்து வருவதால் அதிகளவில் பறவைகள் பயிர்களை நாசம் செய்து செல்வதால் காலை நேரங்களில் நயினார் தனது நிலத்திற்கு சென்று பட்டாசு வெடித்து விரட்டி விடுவது வழக்கம்.
அதே போன்று இன்று காலை வழக்கம் போல் நயினார் பறவைகளை விரட்ட பட்டாசு வெடிக்க சென்றபோது பெரிய அளவிலான உருவம் ஒன்று திடீரென்று வேகமாக சென்றது. நிலத்தில் கால் பதிந்ததை நயினார் பார்த்தபோது சிறுத்தை கால் தடம் போல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் நயினார் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஊர் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள பொதுமக்களிடம் இந்த தகவலை கூறினார்.
இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வன சரக அலுவலர் கேசவன் தலைமையில் வனவர் திலகராஜ், வன ஆர்வலர் செல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலப்பகுதியில் பதிந்துள்ள கால் தடம் சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் மிருகமா? என சோதனை மேற்கொண்டனர்.
இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.