குடும்ப ஆட்சி வேண்டுமா? வாரிசு அரசியல் தொடர வேண்டுமா? - திமுகவை விமர்சித்த இபிஎஸ்
- தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை கொண்டு வர முயல்கிறார் ஸ்டாலின்
- 10 ஆண்டுகள் எங்கள் ஆட்சியின் திட்டங்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசுகிறேன்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட பி.டி.மூர்த்தி நகர், பாடியநல்லூரில் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என இருபெரும் தெய்வங்களை வணங்கி துவங்குகிறேன். மாதவரம் மக்கள் அனைவரும் இங்கு குழுமியிருப்பதால் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது. அதிமுக வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டார், இது வெற்றி விழா பொதுக்கூட்டம் போல் காட்சியளிக்கிறது.
ஸ்டாலின் துரோகத்தைப் பற்றி பேசுகிறார். துரோகத்தின் மொத்த அடையாளமே ஸ்டாலின்தான். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தான் துரோகி. உண்ணாவிரத நாடகம் நடத்தி ஈழத்தமிழர்களுக்கு துரோகம், கட்சத்தீவை தாரை வார்த்த துரோகி, டெல்டாவில் மீத்தேன் கொண்டுவந்து நிலத்தை பறிக்க முயன்ற துரோகி, 2021 தேர்தலில் பொய் வாக்குறுதி அள்ளி வீசிய துரோகி ஸ்டாலின்.
73 ஆண்டுகள் 2021 வரை 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி தான் கடன். 5 ஆண்டில் பல்வேறு திட்டங்கள் என்று சொல்லி கொள்ளையடித்த துரோகி ஸ்டாலின். 100 நாள் வேலையை 150 நாட்கள் உயர்த்துவேன் என்று சொல்லி ஏமாற்றிய துரோகி. ஆட்சியே போனாலும் பரவாயில்லையாம், போகத்தான் போகுது. இப்பதான் ஸ்டாலினுக்கு பயம் வந்திருக்கு. எடப்பாடி பழனிசாமி பயந்தாங்கோலி என்கிறார், நான் மட்டுமல்ல என் தொண்டர் கூட பயப்பட மாட்டான், வீரம் நிறைந்த மறவர் கூட்டம். சொந்தக் காலில் நிற்கும் கட்சி. திமுக போல பல கட்சிக் கூட்டணியில் முதுகில் சவாரி செய்யும் கட்சியல்ல, மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி, உழைப்பை நம்பியிருக்கும் கட்சி.
எங்களைப் பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். உங்களுக்கு குடும்பம் தான் முக்கியம். மக்களைப் பற்றி கவலைப்படாதவர். அதிமுக மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி. அதனால் தான் கடுமையான வறட்சியில் காப்பாற்றினோம், தடையில்லா குடிநீர் கொடுத்தோம். புயலை எதிர்கொண்டு நிவாரணம் கொடுத்தோம். கொரோனா கடுமையான பிரச்னை. காற்றில் பரவியது. அப்படிப்பட்ட காலத்தில் திறமையாக செயல்பட்டு விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் அதிமுக அரசு.
உங்கள் அரசு கொள்ளை அடிக்கும் அரசு. அரசு இருக்குதா இல்லையா என்று மக்கள் கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொரோனாவில் விலைவாசி உயரவில்லை. ஏழைகளுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு கொடுத்தோம். ரேஷன் கடையில் ஓராண்டு பொருட்கள் விலையில்லாமல் கொடுத்தோம், ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அரசுக்கு ஒரு ரூபாய் வரி வருவாய் இல்லை. டாஸ்மாக், பத்திரப்பதிவு, பெட்ரோல் டீசல், ஜிஎஸ்டி எதுவும் இல்லை, வரியே இல்லாமல் ஆட்சி செய்தோம்.
திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன். மக்களை கடனாளியாக்கிவிட்டார். இதுக்கு ஸ்டாலின் தான் காரணம். அப்படிப்பட்டவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? அந்த கடனை நீங்கள் தான் கட்டணும். உங்கள் தலை மீதுதான் கடன் விழுகிறது.
525 வாக்குறுதிகள் கொடுத்தனர், 100 நாள் வேலைதிட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, சம்பளம் உயர்த்தவில்லை. கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுக்கவில்லை. கூடுதல் சர்க்கரை ஒருகிலோ கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யவில்லை.
ஆனால், எப்போதும் ஸ்டாலின் உரிமைத் தொகை பற்றி பேசுகிறார். இவர் சொந்தப் பணத்தை கொடுப்பது போல சொல்கிறார். ஸ்டாலின் டிரஸ்ட்டில் 8 ஆயிரம் கோடி பணம் இருக்கிறது. அதெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதா?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் நிறைவேற்றவில்லை. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யவில்லை, சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள், விவசாயிகள், மருத்துவர்கள் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கொள்ளை அடித்தது தான் மிச்சம்.
மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள், தேர்தல் மிஷின் ஸ்தம்பிக்கும் வகையில் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் ஆட்சியில் 2011-21 வரை குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
10 ஆண்டுகள் எங்கள் ஆட்சியின் திட்டங்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசுகிறேன். 2021-26 வரை திமுக ஆட்சி திட்டங்கள் குறித்து நீங்கள் விளக்குங்கள் பொதுமக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் என்று அழைத்தேன். இதுவரை பதிலில்லை.. குடும்ப ஆட்சி வேண்டுமா? வாரிசு அரசியல் தொடர வேண்டுமா?
அந்தக் காலத்தில் அரசர் தனக்கு பின் மகனுக்கு முடிசூட்டுவார்.. அதுபோல ஸ்டாலின் முயற்சிக்கிறார். கருணாநிதி தலைவர், முதல்வர், அதன் பின்னர் ஸ்டாலின், அதன் பின்னர் எந்த உழைப்புமே இல்லாமல் உதயநிதியை பிரச்சாரம் செய்ய வைத்து துணை முதல்வர் ஆக்கிவிட்டார். திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். துரைமுருகன் உழைப்பு கொடுத்திருக்கிறார். அதிக நாள் எம்.எல்.ஏவாக இருந்தவர், அவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்காததால் துணை முதல்வர் கிடைக்கவிலை.
அதிமுக ஜனநாயகப்படி செயல்படும் கட்சி. விசுவாசமாக செயல்பட்டால் உயர்ந்த பதவி கிடைக்கும். இல்லை என்றால் நான் எல்லாம் உங்கள் முன்பு வந்து பேச முடியுமா? கனவிலும் நடக்காது. அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர், முதல்வர் ஆக முடியும். ஸ்டாலினால் ஒரு வார்த்தையாவது இப்படி பேச முடியுமா..? திமுகவில் உழைத்தவர்களுக்கு தலைவர், முதல்வர் பதவி கிடைக்கும் என்று அவரால் சொல்ல முடியுமா? முடியாது.
திமுக ஆட்சியில் கஞ்சா விற்காத இடமே இல்லை. இளைஞர்கள் அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அது நல்ல முடிவாக இருக்க வேண்டும்.
அதிமுக பாஜகவை கண்டு நடுங்குகிறதாம். எப்போதும் யாரைக் கண்டும் அதிமுக நடுங்கியது இல்லை. திமுகவும் காங்கிரசும் மத்தியில் இருந்தபோது அறிவாலயத்தில் ரெய்டு கூட்டணிப் பேச்சு நடந்தது. அதிமுக அப்படியல்ல, காவிரி நீர் பிரச்னைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தும் கூட, உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கி விவசாயிகள் உரிமையை பாதுகாத்தோம்.
நீட் தேர்வு ரத்து என்றார், செய்தாரா? ரகசியம் தெரியும் என்று உதயநிதி சொன்னார். ஆனால், ஸ்டாலின் எங்களால் விதிவிலக்கு பெறமுடியவில்லை என்று கைவிரித்து விட்டார். திமுக.வுக்கு 39 எம்.பிக்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டம் நிதி பெற்றீர்களா? நீட் தேர்வு ரத்துக்கு முயற்சி எடுத்தீர்களா? பேசினால் ரெய்டு வந்துவிடும், அத்தனை பயம்.
வெளியில் வீரப்பாகப் பேசுறது, ஆனால் உள்ளே பயம். பிரதமர் மோடிக்கு கருப்பு பலூன் விட்டார், இன்று மோடி சென்னை வந்ததும் வெள்ளைக் குடை பிடித்தார். மக்களுக்கு எதுவும் தெரியாதா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருமாதிரி, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி என்பதை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. காவல்துறை இருக்கிறதா என்பதே கேள்வி. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? நல்லாட்சி மலர தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். நல்ல கல்வி, உணவு, இருப்பிடம், தடையில்லா மின்சாரம், விவசாயம், நீர், சுகாதாரம் எல்லாம் கிடைக்க வேண்டும், அதெல்லாம் அதிமுக ஆட்சியில் கொடுத்தோம் அதனால் தான் அதிமுக நிலைத்து நிற்கிறது. மீண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடரவேண்டும்.
பல வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். குடும்பத் தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் கொடுப்போம். உடனே ஸ்டாலின் பயந்துபோய் 5 ஆயிரம் கொடுத்தார். அதிமுக அழுத்தத்தினால் தான் ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆண்களுக்கும் கட்டணமில்லா நகரப் பேருந்து பயணம். ஏழைகள் அனைவருக்கும் வீடு, பட்டியலின மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 5 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மாணவர் கல்வி கடன் அரசே செலுத்தும். ஆண்டுக்கு குடும்பத்துக்கு 3 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு வீரர்கள் மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய், காயம் அடைந்தால் 2 லட்சம் இன்சூரன்ஸ், காளைகளுக்கு இன்சூரன்ஸ். சிறுபான்மை பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பொங்கல் தோறும் வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச் சேலை வழங்கப்படும். தரமான பொங்கல் பரிசு வழங்கப்படும்.
மக்கள் மனம் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அதிமுக கொடுக்கும். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சி நின்றால் அவர்களின் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின். பத்திரமாக வீடு போய் சேருங்கள்" என்று தெரிவித்தார்.