ஆசிரியர்களை கைவிட மாட்டேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி
- ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
- எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்.
சென்னை:
சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
ஆசிரியர் போராட்டம் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. நான் அவர்களிடம் பேசி வருகிறேன். திருச்சியில் முதலமைச்சர் இதுபற்றி என்னிடம் கேட்டார். தேர்தல் வாக்குறுதியை கேட்கிறார்கள் என்றேன்.
ஓய்வூதியம் சார்ந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் இடைநிலை ஆசிரியர்கள் சார்ந்த விவாதங்களை நிதித்துறை எங்களிடம் கேட்டுள்ளது. அதனை நாங்கள் தெளிவுபடுத்த இருக்கிறோம். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சம்பள கமிஷன்போது ஏற்பட்டது. நிதித்துறை அமைச்சர், செயலாளரிடம் பேசி நல்ல முடிவை எடுப்போம்.
ஆசிரியர் போராட்டம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கட்டாயம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம். இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.
அவர்களின் உணர்வுகளை அந்த துறையின் அமைச்சர் என்ற அடிப்படையில் புரிந்து கொள்கிறேன். நல்ல முடிவை ஏற்படுத்தும் என்பது தான் ஆசை. கண்டிப்பாக பொறுமையாக இருந்தால் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறார்கள். நாங்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.
ஆசிரியர்களின் போராட்டம் உணர்வின் வெளிப்பாடு. அதனை ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. படித்தவர்கள், எந்த எல்லை வரை போராட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக அவர்களை பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும் அவர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள். கண்டிப்பாக கைவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.