உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.

கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

Published On 2023-07-07 09:12 GMT   |   Update On 2023-07-07 09:12 GMT
  • பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
  • சுகாதார அலுவலர்கள் தலைமையில் மாநகர பகுதி கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்க கூடாது என்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டுள்ளார்.

அதிகாரிகள் சோதனை

ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் இறைச்சிகடை, மீன் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு சகஜமாக இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

வியாபாரிகளுக்கு அபராதம்

அந்த வகையில் நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது நயினார் குளம் மார்க்கெட் முக்கு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு சில கடைகளிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தமாக 15.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 4,600 விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News