உள்ளூர் செய்திகள்

பெரிய கண்மாய் நிரம்பியதால் பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்த கிராம மக்கள். 

பெரியகண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் வழிபாடு

Published On 2022-11-14 09:05 GMT   |   Update On 2022-11-14 09:20 GMT
  • நெற்குப்பையில் பெரியகண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
  • தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியது.

இந்த கண்மாயில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியவுடன் பாரம்பரிய முறைப்படி நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கிராமத்தினர் ஒன்றுகூடி சிறிய மண் பானையில் கருப்பு-வெள்ளை பொட்டு வைத்து, பொட்டுகலயத்தை கீழத்தெருவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பெரியகண்மாய் மடைபகுதி கரையில் பாரம்பரிய முறைப்படி ஊர்முக்கியஸ்தர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஆழமான இடத்தில் குச்சியின் நுனிப்பகுதியில் வைக்கோல் வைத்து கட்டப்பட்டு அதன்மேல் பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியதற்கு அடையாளமாக பெண்கள் குலவையிட, வாண வேடிக்கையுடன் பொட்டுகலையம் வைக்கப்பட்டது.

பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டி யவுடன் பாரம்ப ரிய முறைப்படி பொட்டுக்கலை யம் வைத்து வழிபாடு செய்வது இந்த ஆண்டு நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராமமக்களின் ஐதீகமாகும்.

பெரிய கண்மாய் முழுகொள்ளவை எட்டும்போதல்லாம் திருவிழா போல் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். இந்த விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த், உதவியாளர் முரளி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News