உள்ளூர் செய்திகள்

அண்ணன், தங்கைக்கு அரிவாள் வெட்டு- பிளஸ்-2 மாணவர்கள் உள்பட 6 பேர் கைது

Published On 2023-08-11 09:06 GMT   |   Update On 2023-08-11 09:06 GMT
  • வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது.
  • சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

களக்காடு:

நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17). இவர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் படித்த நாங்குநேரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

அரிவாள் வெட்டு

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை 10-ம் வகுப்பு மாணவியான சந்திரா செல்விக்கும் கையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சியில் சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் நேற்று நாங்குநேரியில் நடந்தது. அப்போது போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

6 பேர் கைது

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News