தமிழ்நாடு செய்திகள்
null

சபரிமலை பக்தர்களால் சென்னை-கொச்சி விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

Published On 2025-12-26 12:33 IST   |   Update On 2025-12-26 12:42:00 IST
  • ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது.
  • சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆலந்தூர்:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் செல்கிறார்கள்.

ரெயில் மற்றும் சாலை மார்க்கமாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது கூடுதல் நேரம் ஆகிறது. இதையடுத்து சமீப காலமாக ஐயப்ப பக்தர்கள் விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து வாகனங்களில் சபரிமலை செல்கின்றனர்.

இதனால் இந்திய விமான நிலைய ஆணையம் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது. ஐயப்ப பக்தர்களுக்காக, கொடுக்கப்பட்டுள்ள, இந்த சிறப்பு சலுகை, வருகின்ற 2026 ஜனவரி 20-ந் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் பலர், சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் அதிக அளவு பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை-கொச்சி-சென்னை இடையே, இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் பெருமளவு செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து, கொச்சி செல்லும் பயணிகள் விமானங்களில், விமான டிக்கெட் கட்டணங்கள் 3 மடங்குக்கு மேல், அதிகரித்து உள்ளன.

சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது சென்னை கொச்சி விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கட்டணம் 3 மடங்குக்கு மேல் அதி கரித்து, ரூ.10,500 தொடங்கி, ரூ11,500 வரையில் வசூலிக்கப்படுகிறது.

அதிலும் சென்னை-கொச்சி நேரடி விமானத்திற்கு மட்டுமே இந்த கட்டணங்கள். அந்த நேரடி விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காமல், சென்னையில் இருந்து, பெங்களூரு வழியாக கொச்சி சென்றால், டிக்கெட் கட்டணம் ரூ.17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

சபரிமலை சீசன் நேரங்களில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு சென்னை-கொச்சி இடையே, சபரிமலை சீசன் காலங்களில் தினமும் 9 விமானங்களும், கொச்சி-சென்னை இடையே 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்பட்டன.

ஆனால் இந்த ஆண்டு, சென்னை-கொச்சி இடையே 7 விமானங்களும், கொச்சி-சென்னை இடையே, 7 விமானங்களும் என மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

4 விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள், கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வசதி கருதி, சபரிமலை சீசன் முடியும் வரையில், சென்னையில் இருந்து கொச்சிக்கு, கூடுதல் விமான சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News