மர்ம நபர் மோட்டார்சைக்கிளை திருடிக் கொண்டு செல்லும் காட்சி.
லாரியில் செல்போனை திருடும் மர்ம நபர்
சங்ககிரியில் பரபரப்பு ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு- வீடியோ வைரல்
- சங்ககிரிைய நோட்டமிட்டு மர்ம நபர்கள் சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஜெராக்ஸ் எடுப்பதற்காக பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு கடைக்கு சென்றார். அதற்குள் மர்ம நபர் மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார்.
சங்ககிரி:
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் லாரி கட்டுமானத் தொழில் பெரிதளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான லாரி பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகின்றன.
அதுபோல் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் எல்லை பகுதியான சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரியில் லாரி பாடி பில்டிங் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. டாரஸ், எல்.பி.ஜி டேங்கர், டிரெய்லர், ரிக் வாகனங்கள், மணல் லாரிகள் என பல்வேறு சரக்குப் போக்குவரத்து வாகனங்க ளுக்கு பாடி கட்டுவதற்கு வருகின்றனர். இதேபோல் லாரிக்கு பெயிண்டிங் பூசும் தொழில், ஒர்க் ஷாப் அதிக அளவில் உள்ளன.
இந்த தொழிலை நம்பி இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் உள்ளனர்.
நோட்டம்
இந்த நிலையில் சங்ககிரிைய நோட்டமிட்டு மர்ம நபர்கள் சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்ககிரியில் உள்ள ஒரு வங்கியில் பயிர்கடன் செலுத்த சென்ற விவசாயி ஜெராக்ஸ் எடுப்பதற்காக பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு கடைக்கு சென்றார். அதற்குள் மர்ம நபர் மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்துள்ளது.
மோட்டார்சைக்கிள் திருட்டு
சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்தில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அங்கு பணிபுரியும் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை ஓட்டல் வெளியே நிறுத்தி விட்டு பணி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியை பார்த்தபோது டிப்டாப் உடை அணிந்த 25 முதல் 32 வயதுக்குள் இருக்கும் மர்ம நபர் வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
மற்றொரு சம்பவம்
அதேபோல் சங்ககிரி எபினேசர் காலனியில் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் செல்போனை மறந்து டிரைவர் வைத்து விட்டு சென்றார். இந்த செல்போனை மர்ம நபர் எடுத்து செல்லும் காட்சியும் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.
இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிள், செல்போன் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தொடர் திருட்டால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.