பர்கூரில் 5 கிலோ கஞ்சா பதுக்கிய வடமாநில தொழிலாளி கைது
- ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
- கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்ச மங்கலத்தில், 100-க்கும் மேற்பட்ட கிரானைட் கம்பெனிகள் உள்ளன. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிரானைட் கற்களை அறுத்து, பாலிஷ் செய்து விற்பனை நடந்து வருகிறது.
கிரானைட் கம்பெனிகளில் பெரும்பாலும், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களை வேலைக்கு அழைத்து வரும் ஏஜென்டாக பீகார் மாநிலம், ஜாம்ஷெட்பூர், வாரிஸ் நகரை சேர்ந்த ராஜேசா (வயது31), என்பவர் இருந்துள்ளார்.
கடந்த வாரம் பர்கூர் அருகே 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மகேஷ் குமார் (25), மதன்குமார் (23), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜேசா, கஞ்சா கடத்துவதில் மூளையாக செயல்பட்டதும், கிரானைட் கம்பெனிகளுக்கு ஆட்களை அழைத்து வரும்போது, கஞ்சாவை கிலோ கணக்கில் கடத்தி வருவதும் தெரிந்தது.
அச்சமங்கலத்தில் ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனையிட்ட போது அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.