தமிழ்நாடு செய்திகள்

கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவி திடீர் மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

Published On 2026-02-10 13:10 IST   |   Update On 2026-02-10 13:10:00 IST
  • திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமையிலான வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
  • மாணவி ரக்சிதா மயங்கி விழுவதற்கு முன்பு தன்னுடைய நெற்றியில் பூச்சி கடித்ததாக ஆசிரியரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரக்சிதா (வயது 9) பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக ஒத்திகை நிகழ்ச்சியில் தனியார் மண்டபத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

நாமக்கல்லில் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளது என கூறி உடலை வாங்க மறுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை மாதேஸ்வரன், தாய் தனலட்சுமி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் உள்ள குமரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமையிலான வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறையாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்களது கோரிக்கையும் கொடுங்கள். அதையும் முதல்- அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் மாணவியின் குடும்பத்தினர் சாலை மறியலை கைவிட்டனர்.

மாணவி ரக்சிதா மயங்கி விழுவதற்கு முன்பு தன்னுடைய நெற்றியில் பூச்சி கடித்ததாக ஆசிரியரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News