உள்ளூர் செய்திகள்

திடீர் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் பஞ்சாயத்து செயலாளர், நெல் நாற்றுடன் வந்த விவசாயி.

மின் இணைப்பு விரைந்து வழங்கக்கோரி நெல் நாற்றுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயி

Published On 2022-06-06 09:41 GMT   |   Update On 2022-06-06 09:41 GMT
  • விவசாய நிலத்தில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
  • நாற்று கருகும் நிலையில் உள்ளதால் விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட கூந்தன்குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். விவசாயி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் நெல் நாற்றுடன் வந்து மனு அளித்தார்.

அந்த மனுவில், கூந்தன்குளம் கிராமத்தில் எனக்கு விவசாய நிலம் உள்ளது. அங்கு நான் ஆழ்துளை கிணறு அமைத்து உள்ளேன். அதனை நம்பி தற்போது நெல் நாற்று நடவு செய்துள்ளேன்.

விவசாய நிலத்தில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே நாற்று கருகும் நிலை உள்ளது. எனவே எனக்கு விரைந்து மின் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்பன் பாண்டியன் அளித்த மனுவில், நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள சிவன் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. இங்கு இரண்டு கடைகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

அப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் ஏலம் எடுக்க சென்றிருந்தபோது மாற்று சமுதாயத்தினர் அவர்களை எடுக்க விடாமல் தாங்களே ஏலத்தில் எடுத்தனர். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக சில அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியை சேர்ந்த யாக்கோபு என்பவர் பதாகையுடன் வந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக அவர் கலெக்டர் அலுவலகம் சாலையில் உள்ள ஒரு மரத்தில் கயிறு மாட்டி தூக்கில் தொங்குவது போல கழுத்தை வைத்து கோஷம் எழுப்பினார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அவரை தடுத்து நிறுத்தி எச்சரித்தனர்.

பின்னர் அவரை போலீசார் அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க செய்தனர். அவர் அளித்த மனுவில், நான் மானூர் யூனியனுக்கு உட்பட்ட மதவக்குறிச்சி ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வந்தேன்.

ஊராட்சிக்கான நிதியை நான் எடுத்து செலவு செய்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு நெல்லை மாவட்ட உதவி இயக்குனர் (தணிக்கை) அறிக்கையின் படி என்னை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக பணி நீக்கம் செய்தது.

அதன் பின்னர் நான் கடந்த 17 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வருகிறேன். எனக்கு வேலை வழங்குவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags:    

Similar News