உள்ளூர் செய்திகள்

மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2023-03-25 09:14 IST   |   Update On 2023-03-25 09:14:00 IST
  • உக்ரைனில் போர் ஏற்பட்டபோது அங்குள்ள தமிழக மாணவர்களை சிறு சிராய்ப்புகூட ஏற்படாத அளவுக்கு பாதுகாத்து அழைத்து வந்தது தமிழக முதலமைச்சராகும்.
  • மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி அல்லது பள்ளி தொடங்கப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பங்கேற்றுப் பேசினார். அப்போது, தமிழகத்தில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளிகள் அதிகம் உள்ளன. ஆனால் அரசு நர்சிங் பயிற்சி பள்ளிகள் குறைவாக உள்ளன. இதன் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

போளூர் எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.) பேசும்போது, உக்ரைன் நாட்டில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், அங்கு நடக்கும் போரினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பினர். அவர்கள் மீண்டும் மருத்துவம் படிப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி அல்லது பள்ளிகளை தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரியுள்ளார். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி அல்லது பள்ளி தொடங்கப்படும்.

உக்ரைனில் போர் ஏற்பட்டபோது அங்குள்ள தமிழக மாணவர்களை சிறு சிராய்ப்புகூட ஏற்படாத அளவுக்கு பாதுகாத்து அழைத்து வந்தது தமிழக முதலமைச்சராகும். அவர்களுக்கு இங்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

மேலும், உக்ரைனில் அவர்கள் படித்து வந்த மருத்துவக் கல்வி பாடத்திட்டம் வேறு எந்த நாட்டிலும் இருக்கிறதா? என்று கேட்டு, அதே பாடத்திட்டங்களை வைத்துள்ள நாட்டிற்கு இந்த மாணவர்கள் சென்று படிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த விவகாரம் இந்த அளவில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News