உள்ளூர் செய்திகள்

கைதான 4 வாலிபர்கள்.

கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது

Published On 2022-11-14 08:56 GMT   |   Update On 2022-11-14 09:14 GMT
  • மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

மதுரை

மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று காலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அனுமார் கோவில் படித்துறை பகுதியில் 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அவர்கள் சிம்மக்கல், வெங்கடசாமி அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20), சிம்மக்கல் சுப்பையா பிள்ளை தோப்பு, பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு, கதிரேசன் மகன் ராமர் என்ற யுவா ராம்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ்குமார் என்பது தெரியவந்தது. யுவராம்குமார், யுவராஜ்குமார் ஆகியோர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News