உள்ளூர் செய்திகள்

பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. பேட்டி அளித்த காட்சி.

டிசம்பர் 11-ந்தேதி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாகரில் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-11-10 10:22 GMT   |   Update On 2022-11-10 10:22 GMT
  • பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது
  • பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேட்டி

நாகர்கோவில்:

நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் இன்று நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வேணுகோபால் கமிஷனை மீறி மாவட்ட நிர்வாகம் பல வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இது கண்டனத்துக்கு உரியது. வருத்தமும் அளிக்கிறது.

குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். எனவே வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி குமரி மாவட்டத்தில் புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை பதில் தரவில்லை. எனவே குமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி டிசம்பர் 11-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொள்ள உள்ளார்கள். அதோடு மாவட்ட நிர்வாகம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர், மேயர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கலந்து கொண்டனர். அதே சமயம் இந்த கூட்டத்தில் அமைச்சரின் மகனும் கலந்து கொண்டு உள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மகளிர் அணி மாநில செயலாளர் உமாரதி ராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News