உள்ளூர் செய்திகள்

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள 7 வீடுகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்- பரபரப்பு

Published On 2023-06-28 14:04 GMT   |   Update On 2023-06-28 14:04 GMT
  • அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தாக்கினர்.
  • ஐந்து பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் ஒன்பது பேர் சுமார் 30 ஆண்டுகளாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள வீடுகளை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் 2017-ம் ஆண்டு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார்.

அதன்பின்னர் இப்பகுதியில் வசித்து வந்த இருவர் நீதிமன்றத்தை நாடியதாக கூறப்படுகிறது. ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள உத்தரவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவிக்கு இணை ஆணையர் உத்தரவிட்டாராம்.

இந்நிலையில், இன்று பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏழு வீடுகளுக்கும் பூட்டி சீல் வைத்தார்.இதனால் அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எதிர்ப்பையும் மீறி ஏழு வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதன் பின்னர், புறப்பட்ட அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தாக்கினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அதிகாரிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆக்கிரமடைந்த கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழுவின் தலைமை நிலைய செயலாளர் நீலவானத்துநிலவன் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஐந்து பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.இதன் பின்னர், அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்தனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

Tags:    

Similar News