உள்ளூர் செய்திகள்

விபத்தில் போலீஸ் ஏட்டு பலி-சூடான் வாலிபரிடம் ஆதார் கார்டு வந்தது எப்படி?

Published On 2023-07-21 14:41 IST   |   Update On 2023-07-21 14:41:00 IST
  • மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
  • சூடான் நாட்டை சேர்ந்த 2 பேரில் ஒருவரிடம் இந்திய நாட்டின் ஆதார் அடையாள அட்டை இருந்ததுள்ளது.

கோவை,

கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி.சி.ஐ.டி ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து(வயது 47).

இவர் நேற்று இரவு பணி முடிந்து 11.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

அவர் ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே சென்ற போது எதிரே வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்துவுக்கு கண், தாடை, பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மொபட்டில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸ்காரர் மாரிமுத்துவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சூடான் நாட்டை சேர்ந்த சுஹைப்(22), இப்ராஹிம்(24) என்பது தெரிய வந்தது.

இவர்களில் சுஹைப் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி-பார்ம் படித்து வருகிறார். இவரது நண்பர் சுராக் போத்தனூர் பகுதியில் தங்கி உள்ளார். அவரை பார்க்க சுஹைப் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவைக்கு வந்து அவருடன் தங்கினார்.

இந்தநிலையில், நேற்று இரவு சுஹைப் குனியமுத்தூர் பி.கே.புதூரில் உள்ள தனது மற்றொரு நண்பரான இப்ராஹிமை பார்க்க சென்றார்.

அங்கிருந்து 2 பேரும் மொபட்டில் வெளியில் வந்த போது விபத்து நடந்தது தெரியவந்தது.

விபத்தில் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இப்ராஹிம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விபத்தில் படுகாயம் அடைந்த சூடான் நாட்டை சேர்ந்த 2 பேரில் ஒருவரிடம் இந்திய நாட்டின் ஆதார் அடையாள அட்டை இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வெளிநாட்டுக்காரர்களுக்கு ஆதார் அட்டை எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் சூடான் நாட்டை சேர்ந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News