உள்ளூர் செய்திகள்

கடலூர் பஸ் நிலையத்தில் புதுவைக்கு செல்லும் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு போலீசார் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கம்

Update: 2022-09-27 08:13 GMT
  • முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
  • தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர்:

நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பினையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவமனைகளுக்கு மற்றும் இதர வேலைகளுக்கு செல்வதற்கு ஏராளமானோர் தினந்தோறும் தனியார் பஸ்களில் சென்று வந்தனர். இன்று நடந்த போராட்டத்தை முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு தனியார் பஸ்கள் எதுவும் இன்று செல்லவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இன்று இயங்கின. காலை முதலே ஓரளவு அரசு பஸ்கள் மட்டும் இயங்கி வந்த நிலையில் தனியார் பஸ்கள் எதுவும் இயங்காததால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதலாக 10 அரசு பஸ்கள் அதிகாரிகளால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகளின் கூட்டம் அலைமோதாமல் பாதுகாப்பான முறையில் பஸ்களில் பயணம் செய்தனர். மேலும் இந்த அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி சென்று வந்தது குறிப்பிடுத்தக்கது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

Tags:    

Similar News