உள்ளூர் செய்திகள்

சூரிக் கத்தியால் மகனின் கழுத்தில் குத்திய தந்தை.. 2வது மனைவி விவகாரத்தில் வெறிச்செயல்

Published On 2026-03-07 12:47 IST   |   Update On 2026-03-07 12:47:00 IST
  • குணசேகரன் தனது பாட்டியை பார்க்க ஆனைமலை கரட்டுக்குச் சென்றார்.
  • ரத்த வெள்ளத்தில் குணசேகரன் மயங்கி விழுந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்செங்கோடு ஈரோடு ரோட்டில் உள்ள ஆனைமலை கரட்டை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (49). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

இவரது முதல் மனைவி அலமேலுவிற்கு குணசேகரன் (25) என்ற மகனும் மரகதம் என்ற மகளும் உண்டு.

இந்த நிலையில் வெள்ளைச்சாமி, ராணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இதனால் முதல் மனைவி அலமேலு தனது மகன் மகளுடன் குமார பாளையம் சென்று அங்கு வசித்து வந்தார்.

குணசேகரன் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு லாரி பட்டையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று குணசேகரன் தனது பாட்டியை பார்க்க ஆனைமலை கரட்டுக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த வெள்ளைசாமிக்கும் மகன் குணசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இங்கு ஏன் வந்தாய் என்று வெள்ளைச்சாமி குணசேகரனை கண்டித்தார். அப்போது குணசேகரன் தான் தனது பாட்டியை பார்க்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி தன்னிடம் இருந்த சூரி கத்தியால் மகன் கழுத்தில் குத்தினார்.

 ரத்த வெள்ளத்தில் குணசேகரன் மயங்கி விழுந்தார். வெள்ளைசாமி அங்கிருந்து ஓடி விட்டார்.

அங்கிருந்தவர்கள் குணசேகரனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குணசேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக குணசேகரன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளை சாமியை கைது செய்தனர்.

திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வெள்ளைசாமியை நீதிபதி ரங்கராஜ் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News