நெகமம் அருகே விபத்தில் மாமனார்-மருமகன் பலி
- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சடையகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). மில் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நெகமம் அருகே உள்ள தூரிபாளையத்தை சேர்ந்த மாமனார் அய்யாசாமி (70) என்பவரை ஏற்றிக்கொண்டு ரங்கன்புதூரில் இருந்து சடையகவுண்டனூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிள் பல்லடம் ரோட்டில் தண்ணீர் பந்தல் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அய்யாசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் அய்யாசாமியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தில் இறந்த மாரிமுத்துவின் உறவினர்கள் இழப்பீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு நெகமம் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.