உள்ளூர் செய்திகள்

போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபர் கைது

Published On 2022-08-18 15:38 IST   |   Update On 2022-08-18 15:38:00 IST
  • சித்தோடு போலீசார் போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபரை கைது செய்தனர்.
  • மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சித்தோடு:

பவானி அருகில் உள்ள ஆர்.என். புதூர் பகுதியில் கடந்த 7-ந் தேதி சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்கு பின்னாக அவர்கள் பதில் அளித்த நிலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சித்தோடு ராயபாளையம் புதூர் பகுதியில் வசிக்கும் திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய இருவரும் வீட்டில் டேப்பேன்டாட்டல் என்ற போதை மாத்திரைகள் வைத்து டாக்டர் அனுமதி சீட்டு இல்லாமல் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும் சேலத்தில் இருந்து வாங்கி வந்து விற்கப்பட்ட இந்த மாத்திரைகளை ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் சப்ளை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய 2 பேரையும் சித்தோடு போலீசார் கைது செய்து தலை மறைவான முக்கிய நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு, கனி ராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சஞ்சய் குமார் என்கிற சஞ்சய் (23) என்பதும் போதை மாத்திரைகள் வைத்து விற்பனை செய்து தலைமறைவாக இருந்த முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News