தேவநேய பாவாணர் கொள்ளு பேத்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- முதல்-அமைச்சரிடம், ராஜா எம்.எல்.ஏ. மனு
- 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்தார்.
- பரிபூரணத்தின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
சங்கரன்கோவில்:
தேவநேய பாவாணர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைத்தார்.
அதை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைபாட்டால் பரிபூரணம் உயிரிழந்தார். இந்நிலையில் பரிபூரணம் அரசு வேலையில் இருந்தபோது மறைந்ததால் அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் தேவநேயப் பாவாணர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேவநேய பாவாணர் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.